ads
பேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்
வேலுசாமி (Author) Published Date : Jan 25, 2018 16:54 ISTPolitics News
இந்தியா
தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் பணியாளர்களால் அரசுக்கு 5000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஏஐடியூசி நிர்வாகி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஏஐடியூசி சங்க மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில செயலாளரான லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது "அரசின் போக்குவரத்துக்கு கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று தமிழக அரசு தெரிவித்தது ஏற்புடையதாக இல்லை.
போக்குவரத்து கழகங்களின் வருமானத்தை அதிகரிக்க செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. அங்கே வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் பெருக்கலாம். இதே போல் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு போக்குவரத்து கழகம் தனியாக உணவு விடுதிகளை நடத்தி வருமானம் பார்க்கலாம். இதுமட்டுமல்லாமல் போக்குவரத்து கழகங்களில் வேலையே செய்யாமல் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மாத சம்பளம் பெற்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து கழகத்திற்கு 5000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு முறையாக முறைப்படுத்தலாம்.
மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முறையான செயல்களை செய்யாமல், ஊழியர்கள் மீது பழியை சுமத்துவது சரியல்ல. பேருந்து கட்டண உயர்வுக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியும். தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக ஒவ்வொரு பேருந்துக்கும் 5 லட்சம் பெற்றுக்கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதற்கான முழு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது’ என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.