ads
தொடர் போராட்டங்களுக்கு பிறகு பஸ் கட்டணம் குறைப்பு
வேலுசாமி (Author) Published Date : Jan 29, 2018 12:55 ISTPolitics News
இந்தியா
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வு கடந்த 19ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த பேருந்து கட்டணம் கிட்டத்தட்ட 66 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் அன்றாடம் பயணித்து வரும் பேருந்தில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 50, 100 க்கு கூலிக்கு போகும் தொழிலாளிகள், சம்பாதிக்கும் பணம் பயணத்திற்கு செலவழித்தால் குடும்பத்திற்கு என்ன செய்வது என்று வருத்தம் தெரிவித்தனர். இந்த பேருந்து கட்டண உயர்வால் மாணவ மாணவியர்கள், தொழிலாளிகள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்க பட்டனர். வெளியூருக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளை தவிர்த்து ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
இதனை அடுத்து மாணவ மாணவியர்கள் போராட்டங்களை கையில் எடுத்தனர். தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் பெருகியது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். தமிழகத்தின் நடைபெற்ற பல போராட்டங்களுக்கு பிறகு அரசு தற்போது கட்டண உயர்வை மாற்றியமைத்து பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது. ஆனால் இந்த கட்டண குறைப்பு வெறும் கண் துடைப்பு செயல் தான் என்று திமுக தெரிவித்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக திரு ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை அடுத்து தற்போது திமுக சார்பில் தமிழக அரசை எதிர்த்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கட்டண குறைப்பில் சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைத்துள்ளது. இதே போல் விரைவு பேருந்துகளில் 80 லிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் 90 லிருந்து 85 பைசாவாகவும் குறைத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று (28.1.2018) அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் இந்த பேருந்து கட்டண குறைப்பால் அரசிற்கு நாளொன்றுக்கு 4 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக நாமக்கல்லில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.