ads
பத்மாவத் வில்லன் அலாவுதீன் கில்ஜிக்கு தாதா சாகேப் பால்கே விருது
வேலுசாமி (Author) Published Date : Apr 10, 2018 17:56 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பிரமாண்ட படம் 'பத்மாவத்'. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் ஷாகீத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் நல்ல வசூலையும் குவித்து வந்தது.
சித்தூரை ஆண்ட ராணி பதமினியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படத்தில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும், பத்மாவதியின் கணவர் ரத்தன் சிங் கதாபத்திரத்தில் நடிகர் ஷாகித் கபூரும், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினரிடம் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த படத்திற்கு ஏராளமான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.
சென்சார் போர்டும் அனுமதி தருவதில் தாமதமானது. இதன் பிறகு ஒருவழியாக 28 காட்சிகளை நீக்கிய பிறகு இந்த படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்தது. மேலும் இந்த படத்தின் 'பத்மாவதி' என்ற பெயரை மாற்றி 'பத்மாவத்' என்ற தலைப்பில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டது. இதன் பிறகு இந்த படம் பத்மாவத் என்ற பெயரில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றது.
இந்த படத்தில் ரன்வீர் சிங்கின் 'அலாவுதீன் கில்ஜி' கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. இதனை கவுரவிக்கும் விதமாக தற்போது அலாவுதீன் கில்ஜி கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்த ரன்வீர் சிங்குக்கு சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து ஒரு கடிதம் ஒன்றை தாதா சாகேப் பால்கே கமிட்டி நடிகர் ரன்வீர் சிங்குக்கு அனுப்பி பெருமிதப்படுத்தியுள்ளது.