ads
இயக்குனர் மணிரத்னம் இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்து வந்த பாதை
வேலுசாமி (Author) Published Date : Jun 02, 2018 13:03 ISTபொழுதுபோக்கு
இன்று ஒரே நாளில் திரை துறையின் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு பிறந்த நாள். தற்போது இவர்களுடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைத்துறையில் மெலடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா தற்போது வரை 5000க்கும் மேற்பட்ட பாடல்களையும், 1000க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ராசய்யா, ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தேனீ மாவட்டத்தை சேர்ந்தவர். திரைக்குடும்பத்தை சேர்ந்த இவருடைய பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகியோரும் பிரபல இசையமைப்பாளர்கள். இவர் இசையமைப்பாளராக திரைத்துறையில் 42 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதல் படம் 1976இல் வெளியான 'அன்னக்கிளி'. இந்த படத்திற்கு பிறகு இதுவரை 1020 படங்கள் இவருடைய இசையமைப்பில் வெளியாகியுள்ளது.
இவருடைய இசையமைப்பில் இறுதியாக நாச்சியார், சில சமயங்களில் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அடுத்ததாக மாமனிதன், கடவுள் 2 போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இவருடைய மெலடி பாடல்கள் தற்போது வரையிலும் ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறது. 1943இல் பிறந்த இவர் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றியுள்ள இவர் நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற விருதுகளும், சிறந்த இசையமைப்பாளருக்கான நேஷனல் அவார்ட், தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட், நந்தி அவார்ட், பிலிம்பேர் அவார்ட் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். இவரை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களும் இன்று 62வது வயதை எட்டியுள்ளார்.
வயது கூடினாலும் தன்னுடைய படங்களில் காதலும், கதையம்சமும் மிகவும் அழகாக தெரிவிப்பார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை அமைப்பாளரான இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் தற்போது தன்னுடைய மனைவி சுஹாசினி மற்றும் மகனான நந்தன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் திரைக்குடும்பத்தில் பிறந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்கும் அனுமதியே கிடையாது. திரைப்படம் பார்ப்பது தீயபழக்கமாக அவருடைய குடும்பத்தில் இருந்தது.
இதனாலயே இவருக்கு சிறு வயதில் சினிமா மீது ஆர்வம் அதிகமாக அதிகமானது. இவருக்கு நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் ஆகியோர் விருப்பமான நடிகர்கள். இவர் இயக்குனர் பாலசந்தருடைய தீவிர ரசிகர். இவர் திரைத்துறையில் இயக்குனராக 1983முதல் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் படம் 1983இல் கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி. இவருடைய திரைத்துறையில் அறிமுகமான சில படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.
இதன் பிறகு இவருடைய 5வது படமான மௌன ராகம் இவருக்கு நல்ல பெயரையும், பாராட்டையும் தேடி தந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் தற்போது வரை 36 படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக கடந்த ஆண்டில் 'காற்று வெளியிடை' படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு இவர் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந் சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களை ஒன்றிணைத்து 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய படங்கள் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையையும், காதல், தீவிரவாதம் போன்றவற்றை தன்னுடைய பாணியில் மிகவும் அழகாக எடுத்துரைப்பது இவருடைய வழக்கம். இது தவிர இவர் எவரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக இயக்குனராக திரைத்துறைக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 36 படங்களை இயக்கியுள்ள இவர் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.